Friday, August 24, 2012

எண்ணெய் கசிவை தடுத்து நிறுத்தும் களத்தில் இராணுவம்...!


எண்ணெய் கசிவை தடுத்து நிறுத்தும் களத்தில் இராணுவம்

 

              இலங்கையின் மேற்குக் கரைக்கு 10 கிலோமீட்டர் அப்பால் கடலில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு கரையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கக்கூடிய நடவடிக்கைகளை செய்வதற்கு இலங்கை அரசு இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

சைப்ரஸ் நாட்டுக்கு சொந்தமான 15 ஆயிரம் டன் எடைகொண்ட தெர்மோபைலே சியெரா என்ற கப்பல் மோசமான வானிலை காரணமாக கடந்த வியாழனன்று கடலில் மூழ்கியதிலிருந்து அதிலிருந்து எண்ணெய் கசிந்து வருகிறது.

இந்த எண்ணெய்க் கசிவு பத்து கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்பரப்பில் பரவியுள்ளது.

இந்தக் கப்பலில் 600 டன் எண்ணெய் இருந்தது என்றும் அதில் பெரும்பான்மையான எண்ணெய் வெளியில் எடுக்கப்பட்டுவிட்டதென்றாலும் சுமார் 70 டன் எண்ணெய் எஞ்சியிருந்தது என்றும் கூறப்படுகிறது.

எண்ணெய்த் திட்டுக்களில் பெரும்பான்மையானவை மேற்கு நோக்கி திறந்தக் கடல் பரப்புக்குள்தான் செல்கின்றன என்றாலும், ஒரு சில திட்டுக்கள் நீர்கொழும்பு சுற்றுலா நகரை எட்டிவிட்டதாக இலங்கை அதிகாரிகள் கூறுகிறனர்.

இந்த எண்ணெய்த் திட்டுக்களினால் அப்பகுதியில் மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், கொழும்புக்கு தெற்கில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா மையமான கல்கிசையின் கடற்கரை பாதிக்கப்படும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கப்பலில் சென்ற சரக்கான இரும்புக் குழாய்கள் யாருக்கு சொந்தம் என்ற ஒரு தகராறு எழுந்த நிலையில், இலங்கை நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இக்கப்பல் மூன்று ஆண்டுகளுக்கு முன் பிடித்து வைக்கப்பட்டது.
இந்தப் பருவத்தில் கடல் கந்தொளிப்பு இருக்கும் என்பதால், துருப்பிடித்துவரும் இந்தக் கப்பலை இலங்கையின் கிழக்கு கடல்பகுதிக்கு இழுத்துக் கொண்டுபோய் விடலாம் என்ற ஒரு திட்டம் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீதிமன்ற உத்தரவு காரணமாக அந்த யோசனையும் தடுக்கப்பட்டிருந்தது.

இந்தக் கப்பல் மூழ்காமல் தடுக்க முயற்சி எடுத்து வந்த வெல்டிங் தொழிலாளி ஒருவர் தங்களுக்கு மாதக்கணக்கில் சம்பளம் வரவில்லை என்றும், தாங்கள் சொன்ன யோசனைகளை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர் என்றும் தெரிவித்திருந்தனர்.
(பீபீசி)