iran rusia usa isrel rocket missile |
இதையடுத்து அமெரிக்க ஆதரவோடு ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது.
அணு ஆயுதங்கள் வைத்துள்ள அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்று கூறி வருகின்றன. அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளதோடு, அந் நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும் நிறுத்திவிட்டன.
மேலும் பிற நாடுகளும் வாங்கக் கூடாது என்று நிர்பந்தித்து வருகின்றன. ஈரானுக்கு பணம் செலுத்த முடியாத அளவுக்கு சர்வதேச வங்கிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதித்துவிட்டன. இதனால், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் ஈரானுக்கு பணம் தருவது கூட சிரமமாகிவிட்டது.
இந்தக் காரணங்களால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்து வரும் நிலையில், அமெரிக்காவின் மறைமுக உதவியோடு அதன் அணு உலைகள் மீது போர் விமானங்கள், ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.
ஆனால், தங்கள் மீது அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தாக்குதல் நடத்தினால் வளைகுடாவிலும் மத்திய ஆசியாவிலும் உள்ள அமெரிக்கப் படைகள் மீதும் இஸ்ரேல் மீதும் பதிலடி தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கூறி வருகிறது.
மேலும் தங்களது அணு உலைகளில் ஆயுதம் தயாரிக்கவில்லை என்றும், எரிசக்திக்கான ஆய்வுகள் தான் நடப்பதாகவும் ஈரான் கூறி வருகிறது. இதை யாரும் நம்பத் தயாராக இல்லை.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் இதுவரை அமைதி காத்து வந்த ரஷ்யா, இப்போது வாய் திறந்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அது இஸ்ரேலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்கெய் ரியாப்கோவ் கூறுகையில்,
அணு உலை விவகாரத்தில் ஈரான் மீது இஸ்ரேலோ அல்லது வேறு நாடுகளோ தாக்குதல் எதையும் நடத்தக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.
இது போன்ற ராணுவ நடவடிக்கை விவேகமாக இருக்காது என்றும் எச்சரிக்கிறோம். அதையும் மீறி தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கு பகுதியில் அது பேரழிவை ஏற்படுத்தும். அந்த பகுதியின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், அந்தப் பகுதியின் பாதுகாப்பும் பொருளாதாரமும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் இந்தத் தாக்குதலால் மத்தியக் கிழக்கு நாடுகளையும் தாண்டி சர்வதேச அளவிலும் மாபெரும் பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறியுள்ளார்.